No icon

அன்னை மரியா: வியந்து போற்றும் விடிவெள்ளி

இன்று அன்னை மரியாவின் பிறந்த நாள் விழா. நம் திரு அவையோடு இணைந்து உலக மக்கள் அனைவரும் சாதி, இன, மத பாகுபாடு பார்க்காமல் மிக மகிழ்வோடு கொண்டாடி வருகின்றனர்.

அன்னை மரியாவின் பிறப்பைப் பற்றித் தமஸ்கு நகர் யோவான் கூறும்போது “இன்று விடிவெள்ளியின் நாள். அன்று ஏவாள் மனுக்குலத்திற்குக் கொண்டு வந்த சாபத்தை வரமாக மாற்றிய நாள்என்று கூறுகிறார். அதனால்தான் இத்தனை மகிழ்வும், கொண்டாட்டமும்!

ஏனைய புனிதர்களின் விண்ணகப் பிறப்பைக் கொண்டாடும் நம் தாய்த்திரு அவை, மூவருக்கு மட்டும் மண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறது. இயேசுவின் பிறப்பு, அன்னை மரியின் பிறப்பு, திருமுழுக்கு யோவானின் பிறப்பு. இவர்கள் ஜென்மப் பாவமில்லாமல் பிறந்ததால்தான் இந்தச் சிறப்பு. மேலும், இவர்கள் மூவரும் இறைவனின் மீட்புத் திட்டத்தில் முழுமையாகப் பங்கெடுத்தவர்களும் ஆவர்.

அன்னை மரியா சாதாரண பெண்மணி அல்லள்; இறைவனால் முன்மொழியப்பட்டு, இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்டு, அமலியாய்ப் பிறந்து, எப்பொழுதும் கன்னியாய் வாழ்ந்து, இறைவனது தாயாக உயர்த்தப் பெற்று, உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் அன்னை மரியா.

பல்லாண்டுகளாக குழந்தைப் பேற்றுக்காக நம்பிக்கையோடு காத்திருந்தனர் சுவக்கீன்-அன்னா தம்பதியினர். சுவக்கீன் மிகப்பெரிய வியாபாரம் செய்து, வளமையான வாழ்வு வாழ்ந்தபோதும் குழந்தையின்றித் தவித்தார். இருவரும் முதுமைப் பருவம் அடைந்தபோதும், கடவுள்மீது வைத்திருந்த நம்பிக்கையை மட்டும் அவர்கள் இழந்துவிடவில்லை.

கடவுள் ஆபிரகாமுக்கு முதிர் வயதில் ஈசாக்கைக் கொடுத்ததுபோல் நம்மையும் ஆசிர்வதிப்பார்என்று விசுவசித்தார்கள். நம்பிக்கை இழக்காத இவர்கள் இருவரும் செபவாழ்வில் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டார்கள். ஒருநாள் செபித்துக் கொண்டிருந்த போது கடவுளின் தூதர் அன்னாவிற்குத் தோன்றி “கடவுள் உங்களுக்கு உலகமே வியந்து போற்றும் மகளைத் தரப்போகின்றார்என்று வாக்களித்தார். வாக்களித்ததுபோல் சுவக்கீன்-அன்னா தம்பதியருக்கு அன்னை மரியா குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு ‘வானத்து நட்சத்திரம்என்று பொருள்படும் ‘மரியாஎன்று பெயர் வைத்தார்கள்.

மரியாவுக்கு ஒரு வயதாக இருந்தபோது சுவக்கீன் ஆலய குருக்களைத் தன் இல்லத்திற்கு அழைத்திருந்தார். அவர்களிடம் தன் மகள் தனது கன்னிமையால் இறைவனுக்குப் பணிசெய்வார் என்று கூறி, தன் மகள் மரியாவை இறைவனுக்கு அர்ப்பணித்தார்.

பதிமூன்றாவது வயதுவரை ஆலயத்திலே வளர்ந்தவர் மரியா. அங்குச் செபவாழ்விலும், திருச் சட்ட நூல்களைக் கவனமாகப் படிப்பதிலும், ஆலயப் பணிகள் செய்வதிலும், முக்கியமாகத் திரைச் சீலைகள் அமைப்பதிலும் சிறந்தவராக விளங்கினார். பிற்காலத்தில் தன் மகன் இயேசுவின் உடைகளையும் இவர்தான் தைத்துக் கொடுத்திருந்தார்.

இயேசு சிலுவையில் அறைவதற்குமுன், யூத வீரர்கள் கழற்றியது ஒரே தையலால் தைக்கப்பட்ட ஆடை. யூத வீரர்கள் சீட்டுப் போட்டுப் பிரித்துக் கொண்ட இந்த இயேசுவின் ஆடை அன்னை மரியாவால் தைக்கப்பட்டதுதான். நினைத்தாலே நெஞ்சம் கசிகிறது நமக்கு? இந்நிகழ்வை நேரில் பார்த்த மரியாவின் நெஞ்சம் எத்துணை துடி துடித்திருக்கும்?

அன்னை மரியா பிறந்தது முதல், அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை தனது வாழ்வில் அனுபவித்த அத்துணை துன்பங்களையும் தாழ்ச்சியோடு, பொறுமையோடு ஏற்றுக் கொண்டார். அதனால்தான் இன்று உலகமே அவர் பிறந்த நாளை வியந்து போற்றி, அக்களிப்புடன் கொண்டாடி மகிழ்கின்றது.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இத்தினத்தைப் பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாட அழைப்பு விடுக்கிறது. பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகின்ற தமிழ்நாடு திரு அவை அன்னை மரியாவின் பிறந்த தினத்தைப் பெண் குழந்தைகள் தினமாகச் சிறப்பித்து, அவர்களின் வளர்ச்சிக்காகவும் எழுச்சிக்காகவும் இந்த நாளை ஒப்புக்கொடுக்கிறது. இறைவனுக்குத் தொண்டாற்ற தங்கள் மகளை அர்ப்பணித்த சுவக்கீன்-அன்னாவைப் போன்று, இறைப்பணியாற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப முன் வருவோம். அன்னை மரியா ஆலயப் பணி செய்வதில் காட்டிய ஆர்வத்தை இன்றைய இளையோர் கற்றுக்கொள்ள வேண்டும்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அல்லர்; குழந்தைப் பேறு தம்பதியருக்குத் தாமதமாகிறது என்றால், இறைவன் அவர்களுக்கென்று அளப்பரிய திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார் என்பது உறுதி. எனவே, இறைவன்மீது நம்பிக்கையோடு செபிப்போம். அன்னையின் பரிந்துரை நமக்கு எப்போதும் உண்டு. ஏனென்றால், அன்னை நம் ஆலயத்தின் ஆல விருட்சம். நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல நனிமிகு நன்மைகளாகிய கனிகளை நாள்தோறும் நல்குகின்றவர். அவரது அருள் வளங்கள் அள்ளக்குறையா அட்சயப் பாத்திரம்! வரம் கேட்டு வருவோருக்கு, கரம்தொட்டு நாளெல்லாம் வரம் கோடி தருபவர்.  அன்னையின் பிறந்த நாளில் ஊர் கூடிவந்து, தேரிழுத்து வாழ்த்துவோம். ‘மரியே வாழ்க!’ என்று போற்றுவோம்.

Comment